40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் அதிசய கடவுள்……!

அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி….!

புராதன ஆலயங்களுக்கு பெயர்பெற்ற ஊர் காஞ்சிபுரம் ஆகும். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.

🌸 காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு பிறகு, ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், அதற்கடுத்தாற்போல் வரதராஜ பெருமாள் ஆலயமும் சிறப்பு மிக்க தலங்களாக விளங்குகின்றன. இவற்றில் வரதராஜ பெருமாள் ஆலயம் அற்புதங்கள் நிறைந்த தலமாக உள்ளது.

🌸 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் அனந்தசரஸ் என்ற திருக்குளத்திற்குள் அத்திவரதர் உள்ளார். இவர் அத்தி மரத்தால் ஆனவர்.

🌸 இந்த சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.

🌸 இறுதியாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறப்புக்கள் சில…!

🌸 உற்சவருக்கு, ‘அழைத்து வாழ வைத்த பெருமாள்” என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

🌸 கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது.

🌸 வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

🌸 ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம்.

🌸 காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

Advertisements